விளக்கு ஏற்றும் முறை

ஆன்மீக நாட்டம் உள்ள யாவரும் தங்கள் இல்லத்தில் தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் நேரமின்மை காரணமாக ஒரு வேளை மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். வேறு சிலரோ வெள்ளிக்கிழமை மற்றும் சில பண்டிகை மற்றும் சுப நாட்களில் மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். ஆனால் நியமப்படி இரண்டு வேளையும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். நாம் ஏற்றும் விளக்கானது அக இருள் மற்றும் புற இருளை விலக்க வல்லது. புற இருள் என்பது நமது சுற்றுப் புறத்தில் காணப்படும் இருள். அக இருள் என்பது அறியாமை என்னும் இருள் ஆகும்.

 எனவே நாம் ஏற்றும் விளக்கானது  அறிவையும், மங்களகரமான வாழ்க்கையையும், ஆன்மீக உயர்வையும் குறிக்கிறது. விளக்கை ஏற்றுவதால் ஒளி நிறைவது மட்டுமல்லாமல், அந்த இடத்தில ஒரு நேர்மறையான சக்தி நிரம்பி இருப்பதை நாம் காணலாம். விளக்கு ஒளியைக்  காணக் காண நம் மனதினுள் புத்துணர்ச்சி பரவுவதைக் காணலாம். சில வகையான தாவர எண்ணெய், அதிலும் குறிப்பாக நல்லெண்ணெய்,  அல்லது நெய் உபயோகித்து விளக்கு ஏற்றினால், அந்த சூழலே நேர்மறையாக திகழும். அதனால் தான் எந்தவொரு புனித நிகழ்வாக இருந்தாலும் முதலில் தீபத்தை ஏற்றுகிறோம். இதன் காரணமாகத் தான் திருமணமாகி புது மணப்பெண் முதல் முதலில் வீட்டுக்குள்  வரும் போது தீபம் ஏற்றச் சொல்வது வழக்கமாக உள்ளது.  



விளக்கு ஏற்றுவதற்கு உகந்த நேரம்:

ஆன்மாவுக்கும், ஆண்டவனுக்கும் இடையில் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துகின்றன! விளக்கு உடலாகவும், நெய் உணர்வுகளாகவும், திரிகள் ஆன்மாவாகவும், சுடர் ஆன்ம ஒளியாகவும் திகழ்கின்றன. இத்துனை சிறப்பு வாய்ந்த விளக்கினை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் ஏற்றுவது சிறப்பானது. பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை உள்ள நேரமாகும். இந்த நேரம் சூரிய உதயத்திற்கு முன் உள்ள ஒரு சிறப்பான நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவதும், தியானம், யோகா போன்ற செயல்களில் ஈடுபடுவதும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.  பிரம்ம முகூர்த்தத்தை தவற விட்டாலும் காலை சூரிய உதயத்திற்கு முன் விளக்கு ஏற்ற வேண்டும். அதே போல மாலை விளக்கினை  சூரிய அஸ்தமனத்திற்குப் பின் ஏற்ற வேண்டும்.

 

எத்தனை விளக்குகள் ஏற்றலாம்?

நாம் தினமும் விளக்கு ஏற்றும் போது,  அது எந்த விளக்காக இருந்தாலும் ஒரு விளக்காக ஏற்றக் கூடாது இரண்டு விளக்குகளாக  ஏற்ற வேண்டும். காமாட்சி விளக்கு ஏற்றும் போது அதனை ஏற்றிவிட்டு இரண்டு துணை விளக்குகளை ஏற்ற வேண்டும்.குத்துவிளக்கு ஏற்றும் போது இரண்டு விளக்குகளாக ஏற்ற வேண்டும். விளக்கின் சுடரில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. வீட்டின் நிலை வாசலில் விளக்கு ஏற்றுவது நல்லது. இலவம் பஞ்சு திரிகளை உபயோகித்து விளக்கு ஏற்றுவது நற்பலன்களை அளிக்கும்.

எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்

கிழக்கு: கிழக்கு நோக்கி விளக்கேற்றுவது துன்பங்களை நீக்கும். குடும்ப அபிவிருத்திக்கு வழிவகுக்கும்.  செல்வம், நன்மை ஆகியவற்றை தரும்.

மேற்கு: மேற்கு நோக்கி விளக்கேற்றுவதால் கடன் தொல்லைகள் நீங்கும். உறவுகளில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஓங்கும். தோஷங்களை நீக்கும்.

வடக்கு: வடக்கு நோக்கி விளக்கேற்றுவது திருமணத் தடையை நீக்கும்.  மங்களகரமான செயல்கள் நடப்பது, செல்வம் பெருகும் போன்ற பலன்களை தரும்.அறிவு மற்றும் ஞானம் பெருகும்.

தெற்கு: தெற்கு நோக்கி விளக்கேற்றுவதை தவிர்க்க வேண்டும்இது மரண பயத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

 

எந்தெந்த விளக்கிற்கு என்னென்ன பலன்கள்?

மண் விளக்கு/ அகல் விளக்கு - அனைத்து வகையான நன்மைகளையும் தரும்.

பித்தளை விளக்கு - குடும்ப ஒற்றுமை தரும்.
வெண்கல விளக்கு - தோஷத்தை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
செப்பு விளக்கு - மன அமைதியையும், வீட்டில் அமைதியான சூழலையும் கொண்டு வரும்.
வெள்ளி விளக்கு - இல்லத்திலும் மனதிலும் அமைதியை கொண்டு வந்து நிறைவைத் தரும் மற்றும் மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிட்டும்.
தங்க விளக்கு - ஆயுளை நீட்டிக்கும்.
இரும்பு விளக்கு - சனி பகவனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து காக்கும்.

தீபம் ஏற்றும் முறை:

     விளக்கில் எண்ணெய் ஊற்றிய பின் திரியை போட வேண்டும்.

     விளக்கு ஏற்றும் போது, விளக்கு குளம்போல எண்ணெய் நிரம்பி இருக்க வேண்டும்.

     விளக்கு நன்றாக எரிய வேண்டும், புகையக் கூடாது, அலை பாயக் கூடாது.

 

விளக்கேற்றுவதில் எதெல்லாம் செய்யக் கூடாது?

ஒரு விளக்கிற்கு பயன்படுத்திய எண்ணெயை மற்றொரு விளக்கிற்கு பயன்படுத்தக் கூடாது. விளக்கை தேய்க்காமல் எண்ணெய் பிசுக்குடன்  மீண்டும் மீண்டும்  பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். விளக்கில் எண்ணெய் ஊற்றி இரண்டு நாட்கள் எரிந்த பிறகு, விளக்கை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், அதில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை கீழே ஊற்ற வேண்டும். விளக்கை சுத்தம் செய்த பின் புதிய எண்ணெய் ஊற்றி மீண்டும் விளக்கை ஏற்ற வேண்டும். விளக்கை கையால் தூண்டி விடுதல் அல்லது அனைத்தல்  கூடாது.

தீபம் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்?

குறைந்தது 30 நிமிடங்களுக்கு விளக்கு எரியவிட வேண்டும்.  அதற்கு மேல் அவரவர் வசதிக்கேற்ப எரிய விடலாம். 

Comments